Translate

1/29/2009

தொடரும் நினைவுகள்...........பாடல்கள்

எத்தனை சோகத்துல இருந்தாலும் எத்தனை மகிழ்ச்சியில இருந்தாலும் சினிமா பாட்டுகள் மட்டும் இல்லன்னா........ஒரு சூன்யமாகத்தான் இருந்திருக்கும் வாழ்க்கை என்று தோன்றுகிறது..

.எம்.இராஜா, ஜிக்கி, கண்டசாலா, பி.சுசீலா என்று எத்தனை இனிமையான குரல்களில் கிடைத்த அந்த அழகிய மனதை வருடும் இனிய பாடல்கள்......

இவர்களே இசையமைத்து பாடின பாடல்கள் ........

எம்.எஸ். விஸ்வநாதனின் இசையமைப்பு, கணக்கிட முடியாத இன்ப நாதங்கள்......

தனிமையிலே இனிமை காண முடியுமா........நிச்சயம் முடியம் இந்த பாடல்களை கேட்க்கும் செவித்திறன் உள்ள வரையில்.

1/28/2009

சத்திய சோதனை.....

சத்திய சோதனைன்னு வாழ்ந்த நம்ம காந்திஜி ...சுட்டு கொன்னாங்க....சதியம்ன்னாலே கொஞ்சம் பயமாதாங்க இருக்குது......

"சத்தியத்துக்கு" எப்பவுமே சோதனைகள் அதிகம் தான், அதுல இப்ப "சத்யம்" கம்பனியும் மாட்டிகிட்டது.....

அதே மாதிரி இன்னொரு பொருத்தம் கூட நினைவுக்கு வருது ........"ராமராஜ்" என்றாலும் பிரச்சினைக்குரிய "பெயரு" தான்.....போல .......

இது ரெண்டும் ஒரே இடத்துல இருந்தா.....பிரச்சினை இல்லாமல் போகாது என்பதற்கு "சத்யம்" கம்பனி எடுத்து காட்டு.

இலங்கையிலே எப்படி நம்ம அப்பாவி தமிழர்கள் வேதனையில் சிக்கி விமோசனத்துக்கு காத்து கிடக்குராங்களோ அப்படி ஆகி விட்டது "சத்தியத்தில்" வேலை பார்க்கும் ஒவ்வொருத்தரின் நிலைமையும்.......

"ச்சா.......என்னடா உலகம் இதுன்னு" நினைக்க தோணுதுங்க......

என்னை கேட்டா ஐ.டி. கம்பனிகளை பார்த்து மத்தவுங்க எல்லோரும் விட்ட பெருமூச்சும் பொறாமையும் தான் இப்படி ஒரு சோதனையான கால கட்டத்தை உருவாக்கி விட்டுடுச்சி......

சாமி வரம் குடுத்தாலும் அடுத்த வீட்டு காரனுக்கு ரெண்டு கண்ணும் பொட்டையா போகணம்னு வரம் கேட்குற நல்ல உள்ளங்கள் வாழும் பூமி தானே இது........

அதனால தான் பாவம் இன்னைக்கு "சத்தியத்துக்கே" சோதனை வந்துடுச்சி......

இன்னைக்கு "சத்திய" சோதனை........வரும் நாட்களில் மத்த கம்பனிகளுக்கும் இதே போல சோதனை காலம் வராம கவனத்தில் கொண்டுவராவிட்டால்......எதிர் கால இந்தியா வல்லரசு ஆகுமோ இல்லையோ திவால் ஆகிவிடும் என்பது தெளிவாக தெரிகிறது.......

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்" ...என்று வேதனையாக பாட முடியவில்லை எச்சரிக்கை செய்ய தோன்றுகிறது......

தொடரும் நினைவுகள்........"ஸ்லம் டாக்"

"காவியத்தலைவி" இந்த சினிமாவை எத்தனை முறை பார்த்தாலும் எனக்குமீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்........ சவுக்கார் ஜானகியம்மாவின் இரட்டைவேட நடிப்பு, தாய் மகளுடைய பாசத்தை என்னமா நடிச்சு காட்டுவாங்க....... இப்போதெல்லாம் ஜோதிகா கொஞ்சம் கண்களை விரிச்சு கேள்வி கேக்ற மாதிரிஎல்லா படத்துலேயும் ஒரே மாதிரி ஆக்டிங் பண்ணா கூட " "என்ன நடிப்புன்னு" புகழறாங்க ........அத்தனை நடிப்புக்கு பஞ்சமா போச்சு.....இப்போல்லாம் ......

"ஸ்லம் டாக்" சினிமா பார்த்தேன், அதுல கதை அமைப்பு ரொம்ப நல்லா இருக்கு , [ஒவ்வொரு கேள்விக்கும் ஹீரோ பதில் சொல்லறத காண்பிக்கறது ] அப்புறம் நம்ம ஊருக்கே உரிய "ஹீரோவ பார்க்க" கடவுளை பார்க்க கூட அப்படி ஓடமாட்டாங்க நம்ம ஜனங்க ..............நல்ல சீன் ......ஒரு சந்தேகம் வருது........அவ்வளவு அசிங்கமும் மேல இருக்கும்போது எப்படி அந்த சின்னபையன் கையுல ஹீரோவோட படம் மட்டும் முழுசா நாத்தம் அடிக்காம இருந்ததுன்னு????!!!!!!!!!!

என்னவோ போங்க ஒரு வழியா நம்ம ரகுமான் தங்க அவார்டு வாங்கிட்டாரு.....

இந்த சினிமாவ பார்க்கும் போது எனக்கு மனசுல ஏற்கனவே ஆஸ்கார் அவார்டுவாங்கின "மில்லியன் டாலர் பேபி" படம் போலவே நம்ம ஊரு "கோன் பனேகாக்ரோர்பதி" யோட சேர்த்து ஒரு கலவை பண்ணி இருக்காங்கோன்னு நல்லாவேதெரியுது.........மணி ரத்தினத்தின் "பாம்பே"யும் "நாயகனின்" கலவையும் கூடஇந்த படத்தில் நிறைய காட்சிகளை நினைவுப்படுத்துகிறது

அந்த அசிங்கத்துல பையன உழ வச்சு நடிகன பார்க்க ஓட வச்சிருக்கிற காட்சியில நம்ம ஊரு பெருமை உலகமே தெரிஞ்சிருக்குன்னு தெரியுதுங்க......

அந்த சீன் பார்த்த அப்புறம் சாப்பிடவே பிடிகலீங்க அப்படியொரு தத்ரூபமா எடுத்திருக்காங்க......நாமளும் எவ்வளவோ அசிங்கத்த பார்த்திருகோம்.......ஆனா இந்த மாதிரி படத்துல பார்த்தது இல்லைங்கோ ........கொடல புரட்டுது.....அந்த ஒருசீனுக்கே ஆஸ்கார் அவார்டு கெடைசிடும்.......

இலங்கை போர்

இரண்டு நாடுகளுக்கு போர் நடப்பது எனபது நாம் படித்த சரித்திர புத்தகங்களில்ஒரு நாட்டு மன்னன் அடுத்த நாடு மீது போர் தொடுப்பது எனபது தான். எந்த மன்னன் சிறப்பாக போரிடுகிறானோ அவன் கைப்பற்றிய ஊர்களை அவன் தன்நாட்டுடன் இணைத்து கொள்வான், என்று படித்து இருக்கின்றோம், சிங்கள அரசுஎந்த நாடினரோடு போர் செய்கிறார்கள்?

சமீபத்திய செய்திகளில் நாம் படிக்கின்ற போர்கள் வித்தியாசமான காரணங்களைகொண்டிருப்பது, போரின் புதுமையை காட்டுகிறது, சதாம் உசேன் என்றசர்வாதிகாரியை ஒழிக்க அமெரிக்கா போர் தொடுத்தது என்பதும், நாம் வாசித்தசெய்தி, வேறு சில செய்திகள் அமெரிக்கா சுய நலத்திற்காக நடத்திய போர்என்றும் செய்திகள் வெளி வந்தது, ரஷ்யாவில் நடந்த போர், சீன போர், இஸ்ரேல்போர், என போர்கள் நடந்தாலும் இலங்கையில் நடக்கும் போர் ஒரு நீதியற்றபோர்.

எனது அம்மாவின் அப்பா அவரது ஆறாம் வயதில் இலங்கைக்கு கொண்டுசெல்ல பட்டு அங்கிருந்த டீ தோட்டங்களில் வேலை செய்து சம்பாதித்தபொருளை கொண்டுவந்து எனது அம்மாவின் தாயாரை திருமணம் செய்ததாகஎன் தாய் என்னிடம் சொல்லியதுண்டு.

இந்தியாவில் ஒரு சட்டம் உண்டு, நிலத்தையோ வீட்டையோ யாரொருவர்உபயோக படுத்துகிறாரோ அவருக்கு அந்த நிலம் அல்லது அந்த வீடுசொந்தமாக்கிக்கொள்ள முடியும் எனபது, அல்லது ஒரு தகப்பனின் சொத்தை அவருடைய வாரிசுகள் பகிர்ந்து கொள்ள முடியும், இப்படிஎல்லாம் பலசட்டங்கள் இந்தியாவில் வந்துள்ளது, அண்டை நாடான இலங்கையில் நிலைமை தலை கீழாக உள்ளது.

இத்தனை ஆண்டுகள் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை அதே போன்று அங்குவாழ்ந்த சிங்கள அரசு ஒடுக்குவது எனபது நீதியற்ற செயல்; போர் செய்து அழிப்பதுதான் அவர்களது குறி என்றால், இப்போதாவது இதற்கொரு முடிவுகட்டத்தானே வேண்டும்? துவக்க காலங்களிலேயே [ முளையிலே கிள்ளி எறிவது ] இந்த போருக்கு ஒரு முடிவு கற்பித்து இருந்திருந்தால் எத்தனை மக்களை காப்பாற்றி இருக்க முடியும்?

காலம் கடந்த முயற்சி என்றாலும், மரமாக வளர்ந்த நிலையில் இருக்கும்இலங்கை போரை ஆணி வேரோடு பிடுங்கி எடுத்திட வேண்டும், இல்லையேல், கேட்பதற்கு ஒருவரும் இல்லை என்ற சிங்கள அரசாங்கத்தின் அராஜக போக்கை முற்று புள்ளி வைக்க முடியாமலே போய்விடும்.

1/23/2009

தொடரும் நினைவுகள்.........

தமிழ் சினிமாவில் என் நினைவில் நிற்ப்பது சில தான், அதில் "அவள் அப்படித்தான்", இதில் வரும் கதா நாயகியின் [ ஸ்ரீ ப்ரியா நடித்தது ], இயல்பான கதையம்சம், இயல்பான நடிப்பு, கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளி வந்த படம் "அவர்கள்" படம் மறக்க முடியாத படம், அதில் கணவனாக வரும் ரஜினிகாந்த் வேடம் மிகவும் உண்மையான மிகவும் சுவாரசியமான கதா பாத்திரம், அவரது அம்மாவாக வரும் கதா பாத்திரம் என்ன ஒரு எதிர்மறையான பாத்திர படைப்பு, என்ன ஒரு அருமையான நெகிழ வைக்கும் காட்சிகள்......

"அவள் ஒரு தொடர் கதை" நடிகை சுஜாதாவின் முதல் படம், என்றாலும் இயக்குனர் சிகரத்தின் (குயவன் கையில் கிடைத்த களிமண்) அல்லவா?

"மேஜர் சந்திரகாந்த்" அருமையான கதை, அருமையான நடிப்பு.

"கெளரவம்", "உயர்ந்த மனிதன்", "தில்லானா மோகனாம்பாள்", வியட்நாம் வீடு, சிவாஜி கணேசனின் அற்புத நடிப்பில்......

நெஞ்சத்தை விட்டு நீங்காத இடம் பிடித்த காட்சிகளும் நடிப்பும்........

"சர்வர் சுந்தரம்" என்ன அற்புத நடிப்பு நாகேஷ் அவர்கள் நகைச்சுவை மட்டுமே நடிக்க முடியும் என்பதை மாற்றி தன்னால் குணசித்திர வேடத்திலும் நடிக்க முடியும் என்று நிருபித்த படம்.

1/21/2009

எனதன்பு மகளுக்கு .........

பிறந்தேனே என நான்
மகிழ்ந்ததுண்டு
என் பெறோரின்
அன்பை
ருசித்தபோது

பிறந்தேனே பெண்ணாக
என மகிழ்ந்ததுண்டு
கணவருக்கு வாரிசு
கொடுக்க முடிந்த போது

காதல் கொண்டவனை
கரம் பற்ற இயலாதென
அறிந்த போதும்
மனம் மகிழ்ந்தேன்
சூட்டிய மாலையிலே
பெற்றோரின்
விருப்பம் அது
என அறிந்த போது

விருப்பமில்லா கட்டிலிலே
விபசாரிபோல்
உறவு கொண்டேன்
உற்றாரும் பெற்றோரும்
மகிழ்ந்திடவே
இன்பம் கொண்டேன்
வயிற்றில் கருவாக
நீ
வந்த போது

முதன் முதலாய்
உன்னை நான்
சுமந்த போது
சொல்லொண்ணா
மகிழ்ச்சி கொண்டேன்
வாரிசு வந்ததென
உற்றாரும்
அன்பு மகள்
தாயாகிறாள்
என
என் பெற்றோரும்
மகிழ்ந்திடவே
நீ பிறந்தாய்
பெண்ணாக

நாளொரு மேனியும்
பொழுதொரு
வண்ணமாய் வளர்ந்தாய் நீ
உன்
ஒவ்வொரு
வளர்ச்சியும் பார்த்து
நான்
பெருமிதம்
அடைந்த கதை
உனக்கெப்படி தெரியும்?
உன்
தாத்தாவும் பாட்டியும்
அறிவார் நன்றே

உறவுகளும் ஒப்புக்கென
எட்டி கூட பார்த்ததில்லை
வருங்கால பணக்காரனாய்
வாழ
நிகழ் காலம் இழந்தே
உன்
தந்தை
மழலை மொழி கேட்டிலர்
உன் முதல்
நடை
கண்டிலர்

நீயோ சிறு குழந்தை
தகப்பன்
முகம் பாராமல்
ஒட்டிக்கொள்வாய் என்
கை
இடுக்கினிலே
அவருடன் நீ
ஓட்டும்
போது
பறந்திடுவார் வேலைக்கு

நீயோ இன்று
அழகிய
வாலிப பெண்
உன் தந்தையோ
இன்று நம்முடன்
பாசமிக்க மகளாய் நீ
தந்தையின்றி வேறில்லை
உனக்கெதுவும்
நடுவில் வந்தான்
காதலனாய்
உனக்கொருவன்


நேற்று வரை நீ
வைத்த
அன்பெல்லாம்
இல்லாமல் போனதுவே
எங்கள்
மீது
முழு மனதும் அவனிடமே
தொலைத்து தான்
விட்டாயோ?
எங்களுடன் நீ வாழ்ந்த
நீண்ட தொரு காலத்தையும்
ஒரு சில திங்களிலே
இல்லை இல்லை
ஒரு சில நிமிடங்களில்
யாரோ ஒருவனிடம்
கொடுத்து விட்டு
விபத்தில் மண்டை உடைந்து
நினைவு மீண்டும்
திரும்பியவர்
போல்
"
நீங்கள் எல்லாம் யாரென"
நீ கேட்க்கும் விந்தை தனை
எண்ண எண்ண
வியக்குதே
மனம்
கனக்குதே மனம்
அறிய மாட்டாய்
நீ
என் துயரை

உனக்கு பிடித்த எல்லாம்
நான் அறிவேன்
உனக்கு பிடித்த
இவனை
மட்டும்
நான் அறியேன்
எதை கண்டு
நீ
பிடித்தாய் " இவனில்"
நான் குழம்புகிறேன்!!!!!!

"
காதலுக்கு கண் இல்லை"
என்போர் பலர்
என்னை
கேட்டால்
"
காதலுக்கு ஏதும் இல்லை"
அதிலும் "மூளை இல்லை"
என்பேன் நான் நிச்சயமாய்!!!!!!!

என் நினைவெல்லாம்
என் இரவெல்லாம்
உன்
நலம் வாழ
வேண்டுகிறேன் இறைவனிடம்
பிறிதொருநாள்
உன்
வாழ்வெல்லாம்
கண்ணீராய் மாறாமல்
வேண்டுகிறேன்
இறைவனிடம்.


1/20/2009

முப்பத்தி இரண்டாவது புத்தக கண்காட்சி


ரயில் பயணம், கல்யாணத்திற்கு பிறகுகணவருடன் சேர்ந்து பம்பாய் செல்ல தாதர்எக்ஸ்பிரஸ் ரயிலில் போகும்போது வாங்கியமுதல் புத்தகம், "எண்ணங்கள்" டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் ஆய்வு கட்டுரை, அதன் பிறகுவாங்கிய ஜவஹர்லால் நேருவின் சுயசரிதைபம்பாயில் உள்ள ஹிகின்பதம்சில், இப்படிபுத்தகம் வாங்குவது எனபது ரயில்பயணங்களின் போது என்று மட்டுமே என்றுஎன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தார் என்கணவர் இது நாள் வரை, என்ன கொடுமை!!!

வேறு வழி இல்லங்க, படிக்க புத்தகம்வேண்டுமானால் கடவுளை பற்றி ஏதாவதுபுத்தகம் வாங்கி படிக்கலாம் வேறு ஒன்றும் கிடைக்காது, எப்போதாவது வாரகடைசி நாட்களில் வாங்கி வரும் "ஹிந்து" ஆங்கில நாளிதழ், விரும்பிய புத்தகம்படிக்காத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா!!! வருடங்கள் ஓடி விட்டன.....

ஒரு முறை பாண்டிச்சேரி சென்ற போது சில புத்தகங்கள் வாங்கினேன், அன்னையை பற்றியும் அரவிந்தரை பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவலுடன்அது ஒரு மகா அனுபவம் ( இந்த அனுபவத்தை தனியான தலைப்பில் எழுதவேண்டும்).

ஒரு வழியாக கடைசி நாளான புத்தக கண்காட்சிக்கு போயாச்சு, வெறும்கண்காட்சியாகி விடக்கூடாதே என்று மனதில் கடவுளை வேண்டி கொண்டேபோனேன், ஏன் என்றால் என் கணவர் எந்த இடத்திற்கும் கூட்டி கொண்டு போகமாட்டார்
அப்படியே போய் விட்டால் மூல வியாதிக்காரனை போல 'சீக்கிரம்' 'சீக்கிரம்' என்று பறந்து ஒன்றையும் வாங்க விட மாட்டார், வேறு என்ன செய்ய, கண்ணில் பட்ட கையில் கிடைத்த சில புத்தகங்களை அள்ளி கொண்டு வந்தாகிவிட்டது ஒரு வழியாக,


மிட்டாய் கடையை முறைத்து பார்ப்பது போல் பார்க்க மட்டுமே முடிந்தது எல்லாமிட்டாயும் வாங்கவேண்டும் என்ற ஆத்திரம் இல்லை, இருந்தாலும்பற்றாக்குறையாக இன்னும் நிறைய நிறைய வாங்க வேண்டும் என்னும்ஆத்திரத்துடனும், அரை மனதுடனும் தான் திரும்பினேன், என் கணவரும்மகளும் ஐயோ! இவ்வளவு புத்தகமா ? இது என்ன எதாவது கோர்ஸ் படிக்கவாஎன்று கேட்டு என் ஆவலை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள், என்ன செய்வது அதுஅவர்களின் பார்வை, போகட்டும், அது மட்டுமா, "இனிமே நமக்கு ஒழுங்காநேரத்துக்கு சோறு கீறு கிடைக்காது" என்று பொருமுகிறார்கள்.

இருந்தாலும் வருட துவக்கமே நன்றாகத்தான் இருக்கிறது, இப்படியே இருந்துவிட்டு போகட்டுமே, என்று மனதுக்குள் சொல்லி கொண்டேன். அடுத்த வருடம்சில வித்தியாசமான அத்தியாவசியமான புத்தகங்களை வாங்குவதென முடிவுபண்ணிவிட்டு மனதின் ஆசையை கட்டுப் படுத்திகொண்டு திரும்பினோம், கோன்ஐஸ் கிரீம், எண்ணெய் இல்லாமல் வருத்த வேறு கடலை, பிருட் சலாத் என்றுவயிற்றையும் நிறைத்தோம், என்னை பொறுத்த வரையில் இவ்வருட புத்தககண்காட்சி சந்தோசம் கொடுத்தது மட்டும் இல்லாமல் அடுத்த முறைஎதையெல்லாம் எப்படி முன்னாலேயே திட்டமிட்டு வாங்க வேண்டும் என்றஅனுபவத்தை கொடுத்துள்ளது.

1/18/2009

ஜெனெரேஷன் கேப்

பள்ளிப்பருவ நாட்கள் வரையில் அம்மா அப்பாவின் மீது ஒருவித பயம், நடை உடை பேச்சு எல்லாவற்றிலுமே அப்பா, அம்மா, ஆசிரியை கூருவதுபடியே நடந்து கொள்ளவது, கல்லூரியில் கால் வைத்ததும் திடீரென்று வியக்கவைக்கும் ஒரு மாற்றம், மாற்றங்கள் தேவைதானே, அதற்கென்று இப்படியொரு மாற்றம் தேவைதானா? இது பெற்றோரின் ஆதங்கம், மாற்றம் இல்லை என்றால் என்னை ஒரு சக மாணவியாகவே நினைக்க மாட்டாங்க அப்படீன்னு சொல்லற கல்லூரி கூட்டம்,

படிப்பிலும் திடீர் மாற்றம் இருக்கா? மதிபெண்கள் குறைய ஆரம்பித்தால் புரிந்து விடும் மாற்றம் எந்த திசை நோக்கி போகிறது எனபது,

அறிவியல் வளர்ச்சி எந்த அளவிற்கு படிப்பை கெடுக்க முடியும் என்பதை உணர வைப்பதும் கல்லூரி பருவத்தில், செல்போன், கணிணி எத்தனை தேவையான அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்புகள்? இவற்றை இவர்கள் பயன் படுத்தும் முறை? இந்த அறிவியல் முன்னேற்றம் வராமலேயே இருந்திருக்கலாமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது!!!

தொலைக்காட்சி இல்லாமல் இருந்த காலத்தை எண்ணி பார்கிறேன், எத்தனை பேரை தினம் தினம் நமக்கு வீட்டினுள் கூட்டிவந்து காண்பிக்கின்றது,எத்தனை செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது, இவைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு அத்தனை முக்கியத்துவம் பெற்று விட்டன மீடியாக்கள். ஆனால் அவற்றை பயன் படுத்தும் முறை????

இப்படிஎல்லாம் கேட்டால், நீங்கள் எல்லாம் அறுபதுகளில் பிறந்தவர்கள் அப்படி பேசுகிறீர்கள் என்று பதில் கிடைக்கும், அப்படி என்றால் பின் வரும் சந்ததி உங்களை பார்த்து நீங்கள் எண்பதுகளில் பிறந்தவர்கள் அப்படித்தான் பேசுவீர்கள் என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ள போகின்றீர்கள் ? என்று நாங்கள் இறந்து விட்டிருந்தாலும் நீங்கள் நினைவு படுத்தி கொள்ளுங்கள் "இப்படித்தானே நாம் நம் பெற்றோரிடம் சொன்னோம்" என்று.

கைகளில் எப்பொழுதும் செல்போன், உபயோக படுத்த தெரியாமலா அல்லது அடிமையாகி விடுவதாலா என்று தெரியவில்லை, அதிகநேரம் உரையாடினால் உடல்நலத்திற்கு கெடுதல் என தெரிந்திருந்தும், மாற்றிக்கொள்ள முடிவதில்லை,

உடைகள் அணிவதிலும் கூட, நாகரீகம் என்ற பெயரில் எத்தனை கோலங்கள்? மேலை நாட்டு கலாசாரம் என்று ஒரு புறம் இருந்தாலும், அப்படி அணியாதவர் பட்டிகாட்டான் என்னும் எண்ணம் எத்தனை தவறு எனபது தெரிந்து இருகிறதா அல்லது தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா? புரியவில்லை!!!!! ஆங்கிலம் பேசியே ஆகவேண்டும் இல்லையென்றால் மதிப்பில்லை எனபது, மடமையா? அல்லது முட்டாள்தனமா? நாகரீகம் அடைந்தவரின் அளவுகோல் ஆங்கிலம் பேசுவதும் பான்ட், ஷர்ட் அணிந்து கொள்வதும் தானா?

ஆங்கில அறிவு தேவைதானே? அதை யாராலும் மறுக்க முடியாதே, வேட்டி கட்டியவரெல்லாம் படிக்காத பாமரர் என்ற எண்ணம் எத்தனை அறியாமை? வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இருக்க வேண்டாமா? வயதில் முதியவர்க்கு மரியாதை எதற்கு என்று நடந்து கொள்வது கூட நாகரீகமா? யார் சொல்லி கொடுத்த நாகரீகம் இவையெல்லாம்? இதற்க்கு பெயர் நாகரீகம் இல்லை அநாகரீகம்.

காட்டு மிராண்டிகள் போல வாழ்ந்து வந்த மனிதனும் (ஆதி மனிதன்) அநாகரீகமாக இருந்தான் என்று தானே ஏடுகளில் வாசிக்கின்றோம்? நாகரீகம் அடைந்த மனிதன் மறுபடியும் அநாகரீகத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறான் என்று தானே பொருள்? ஒரு புறம் அறிவியல் முன்னேற்றங்கள் மறுபுறம் நாகரீகம், ஜெனரேஷன் கேப் என்ற பெயரில் அநாகரீகம்.

காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த ஆதி மனிதன் கூட்டம் கூட்டமாய் வாழ ஆரம்பித்தான், என்பதும் பின்னர் நாகரீகம் அடைந்தான் என்றும் படித்த நாம் இன்று ஆதி மனிதர்களை பின் பற்றி போகிறோம் என்றே நினைக்க தோன்றுகிறது இன்றைய தலை முறையின் பல மாற்றங்கள்.

சிலர் கூறுவது இப்படி " இந்த கால பசங்களோட நாம் தான் நம்மை மாற்றி கொண்டு வாழவேண்டும்" எனபது, மாற்றி கொள்ளவேண்டாம் எனபது என் வாதம் இல்லை, எவற்றை மாற்றி கொள்ள வேண்டும் எனபது தான் கேள்வி.

1/17/2009

ரோஜா பூ


என் தோட்டத்தில் முதலில் வாங்கிய ரோஜா செடி, நான் ஒரு தோட்டகலை விரும்பி, செடி கொடிகளை பார்த்தாலே என் உயிரை பார்ப்பது போல தோன்றும், சிறு வயதிலிருந்தே எனக்கு அதில் ஒரு சொல்லொண்ணா ஈடுபாடு, எபோழுதும் ஏதாவது செடியை வளர்த்து கொண்டிருப்பேன், நிறைய பூஞ்செடிகளை வளர்த்தேன், அதில் மலரும் மலர்களை பார்க்க பார்க்க மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, இத்தனை ஆண்டுகளில் நான் வளர்க்கும் முதல் ரோஜா செடி, வாங்கி வரும்போதே அதில் ஒரு அழகிய பூ இருந்தது, நாட்டு ரோஜா பூசெடி என்று தான் விற்றவர் சொனார்கள்.

மிகவும் வேகமாக வளர்ந்தது, செடியில் ஏகப்பட்ட ரோஜா மொட்டுக்கள், அவை மலர்ந்த போது எனக்கு மிகவும் ஆச்சர்யம், ஆழ்ந்த சிவப்பு நிறமாக பூக்க ஆரம்பித்தது தான், முதலில் வாங்கி வரும் போது சாதரண வெளிர் நிறத்தில் தான் பூ இருந்தது, இதெல்லாம் என்ன பெரிசா எழுத என்ன இருக்குன்னு நீங்க யோசிக்கறது எனக்கு புரியுது, நான் ஒரு குழந்தையை போல நினைக்கும் அருமை ரோஜா பூக்களை மருத்துவர் என்னை தினமும் சாப்பிட சொன்னார், ஐயோ இது எப்படி என்னால் முடியும்,

ஒருநாள் பறித்தேன் சாப்பிடவே மனதில்லை, யோசித்தேன், நான் பறித்து சாப்பிடவில்லை என்றால் இதழ்கள் எல்லாம் தரையில் உதிர்ந்து வீணாகத்தான் போகிறது, மிகவும் கஷ்டப்பட்டு சாப்பிட்டேன், சாப்பிட்டு வருகிறேன்,ஒவ்வொரு முறையும் பூவை பறிக்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது, நான் தலைக்கு சூடி கொள்வதற்கு கூட பூக்களை பறிக்க மாட்டேனே....ஆனால் இப்பொது.....வீணாக தரையில் போக போவது உணவாக போவதில் தப்பொன்றும் இல்லை என்று என்னை நானே சமாதான படுத்தி கொள்கிறேன்.... " இதென்ன சப்ப மேட்டருன்னு" நீங்க சொல்றது எனக்கு கேட்குது .............

1/15/2009

தாவணிக் கனவுகளின் ....தொடர்ச்சி

அவன் விடுவதாக இல்லை, என் வீட்டை கடந்து செல்லும் போதெல்லாம் பார்த்துக்கொண்டே செல்வான், நான் வீட்டின் உள் இருந்தவாறே பார்ப்பது உண்டு, பள்ளி முடிந்து திரும்பும் போதும் என் பின் தொடர்ந்து வருவான், அதனால் நான் எனது உடன் படிக்கும் மாணவிகளுடன் சேர்ந்து வர ஆரம்பித்தேன், இப்படியே ஆறு மாத காலம் சென்றது, ஒரு நாள் என்னுடன் தோழிகள் வரவில்லை, தனியாக வந்து கொண்டிருந்த போது மறுபடியும் பின் தொடர்ந்து வந்தான், எனக்கோ பயம் குடலை புரட்டியது, வெகு அருகில் வந்து ஒரு காகிதத்தை கொடுத்து விட்டு வேகமாக சென்று விட்டான்.

அவனுக்கு என்னை பிடித்து இருப்பதாகவும், எனக்கு பிடித்திருந்தால் பதில் கடிதம் கொடுக்க வேண்டும் என்றும் அதில் எழுத பட்டு இருந்தது, எனக்கு அவனை பிடிக்கவும் இல்லை, காதலும் தோன்றவில்லை, அவன் சொன்னபடி எனது பதிலுக்காக என் பின் தொடர ஆரம்பித்தான், எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை, ஒரு முடிவுக்கு வந்து விட்டேன், எனக்கு பிடிக்கவில்லை, நான் எதற்கு அவனை கண்டு பயப்பட வேண்டும்?, அவன் என்னை பின் தொடர்ந்து வந்தால் வரட்டுமே, இப்படியே எனது பள்ளி நாட்களும் முடிந்தன, அவன் கல்லுரிக்கு போவதாக என் தோழி ஒருந்தி செய்தி சொன்னாள், எங்கயாவது போகட்டுமே எனக்கென்ன என நான் இருந்து விட்டேன், தட்டச்சு, சுருக்கெழுத்து படிக்க தினமும் காலையிலும் மாலையிலும் செல்ல ஆரம்பித்தேன், அவன் என்னை பின்தொடர்வது இல்லை.

எனது தோழியொருத்தி என்னிடம் சொன்ன செய்தி அவன் வேறொரு பெண்ணோடு உறவு கொண்டு இருக்கிறான் என்று, அதை பற்றி எனக்கென்ன விட்டது சனியன் என்று இருந்து விட்டேன், சில நாட்களுக்கு பிறகு அவன் அந்த பெண்ணுடன் அவன் வீட்டிற்க்கு வருவான், சாலையோரங்களிலும் பஸ் நிலையங்களிலும் அவர்கள் இருவரும் உட்கார்ந்து பேசி கொண்டு இருப்பார்கள், அதை பார்க்கும் போது எனக்கு மனதில் எவ்வித சலனமும் ஏற்ப்படுவதில்லை, அவன் அவளை கல்யாணமும் செய்து கொண்டான் என்று என் தோழி சொன்னாள், அவர்கள் இருவரும் அவளது வீட்டிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னாள்.

ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டது, அவனை நான் பார்பதே இல்லை, ஒரு நாள் மற்றொரு செய்தி அவனை பற்றி அவனது மனைவி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு எரித்து தற்கொலை செய்து கொண்டாள் என்றும் அவனுக்கும் அவளுக்கும் பிறந்த ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் செய்தி கிடைத்தது, தற்கொலைக்கு காரணம் அவர்கள் கல்யாணம் அவளது கட்டாயத்தால் நடை பெற்றது என்றும் அவன் அதிகம் குடிக்க ஆரம்பித்தான் என்றும் அவள் குடியை நிறுத்த சொல்லியும் அவன் கேட்காததால் அவள் தன்னை தானே எரித்து கொண்டு இறந்து விட்டதாகவும் அறிய நேர்ந்தது, இதற்க்கு காரணம் அவன் அந்த பெண்ணை விரும்பவில்லை என்றும் அவளும் அவனும் ஒன்றாக இருப்பதை நான் பார்த்து அதன் மூலம் அவனுக்கு கடிதம் அனுப்புவேன் என்று அவன் எதிர் பார்த்ததாகவும், செய்திகளை என் தோழி சொன்னாள்,

ஒரு
நாள் நான் வேலைக்கு செல்ல ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அவன் அங்கு என்னை பார்ப்பதற்காக வந்தான், அவனது இரண்டு கைகளும் எறிந்த அடையாளம் தெரிந்தது, நான் அவனை பார்த்தவுடன் வேகமாக வேறு இடம் சென்று விட்டேன், அதற்க்கு பின் நான் அவனை பார்க்கவில்லை, எனக்கும் வேறு இடத்தில் கல்யாணம் நடந்தது, அவனை பற்றிய செய்தி அறியும் ஆவலுடன் தெரிந்தவர்களிடம் விசாரித்த போது, அவன் வீட்டில் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தனர் என்றும், அவளுடனும் வாழாமல் வேறு ஒரு டீச்சர் வேலை செய்யும் பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் அறிந்தேன். காதல் எனபது தானாக வர வேண்டும், அப்படி வராத வரையில், வற்புறுத்தலுக்காக காதலை ஏற்று கொள்வதென்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. ( இது என்னோட சொந்த கதை சோக கதைன்னு நினைச்சுடாதீங்க )